இப்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. போர் என்று அறிவிக்கப்பட்டதும் குறிப்பாக மத்திய கிழக்கில் இந்த போர் நடக்கிறது என்கின்ற தகவல் வெளியானதும், பலரது பயமாக இருந்தது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் தான். இந்நிலையில் சிங்கப்பூரில் அந்த பயம் மெல்ல மெல்ல உறுதியாகி வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சிங்கையில் பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
Ongoing war situation – High chance of petrol and electricity prices rising in Singapore.
எண்ணெய் விலையேற்றம்..!
இந்த போர் சூழலால் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் நிலையங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டு இருப்பதால் அங்கிருந்து உலக அளவில் விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தரமான கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 119 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இது ஒரு பக்கம் கலக்கத்தை அளிக்கின்றது என்றால், தொடர்ச்சியாக இந்த போர் நீடித்தால் பேரல் ஒன்றின் விலை 150 அமெரிக்க டாலர் வரை கூட செல்லக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
சிங்கையில் கூடிய பெட்ரோல் விலை..!
ஏற்கனவே சிங்கப்பூரில் கடந்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று டாலரை தாண்டியது. ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் இந்த சூழல் தொடர்ச்சியாக நீடித்தால் அது நான்கு டாலர் வரை எகிறக் கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சினையினால் சீனாவும் தனது பெட்ரோல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது இந்த பிரச்சனையை இன்னும் அதிகமாக்குகிறது என்றே கூறலாம். மேலும் நமது சிங்கப்பூர் தன்னுடைய மின்சார தேவைக்கு கிட்டத்தட்ட 95% இயற்கை எரிவாயுவை தான் முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது
அதிலும் குறிப்பாக LNG எனப்படும் இயற்கையை வாயுவை தான் சிங்கை பெரிய அளவில் இறக்குமதி செய்கின்றது. அந்த ஜலசந்தி இப்போது மூடப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கிடைப்பது எந்த அளவிற்கு தடைபட்டுள்ளதோ அதே அளவிற்கு இயற்கை எரிவாயு வான LNG-யும் கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆகையால் ஏற்கனவே உலக அளவில் அதனுடைய விலை நான்கு மடங்கு வரை உயர வாய்ப்புள்ளதால் சிங்கப்பூரிலும் மின்சார கட்டணமும் பெரிய அளவில் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும் இது போன்ற இக்கட்டான சூழல்களை சமாளிக்க சிங்கப்பூர் எரிசக்தி சந்தை ஆணையம் ஏற்கனவே தேவைக்காக கொஞ்சம் எரிவாயுவை சேமித்து வைத்துள்ளது என்பது சற்று நிம்மதி அளித்தாலும் இந்த போர் பதற்றம் தொடர்ச்சியாக நீடித்தால் கையிருப்பும் காலியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதேநேரம் மக்கள் இதனால் பாதிக்காமல் இருக்க மின்சார கட்டணங்களை திடீரென உயர்த்தாமல் இருக்க “டெம்ப்ரவரி பிரைஸ் கேப்” என்ற முறையையும் அரசு அமல்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மக்கள் நிலையான கட்டண ஒப்பந்தத்தில் மின்சாரம் பெற்று வருவதால் உடனடியாக பாதிப்பு இருக்காது என்றாலும் கூட, இந்த போர் சூழல் நீடித்தால் சில சங்கடங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் எரிபொருள் விலை ஏற்றத்தால் போக்குவரத்து, சரக்கு கையாளுதல் உள்ளிட்ட பல விஷயங்களில் விலையேற்றம் ஏற்படும் என்றும் இதனால் பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களிலும் சில அத்தியாவசிய பொருட்களிலும் விலையேற்றத்தை காண வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.