மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து வரும் பதட்ட நிலை, சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து பேசிய ஒரு உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரானது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தியின் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது, கொரோனா காலகட்டத்தில் இருந்த பிரச்சனைகளை விட உள்ளூர் உற்பத்தியாளர்களான எங்களுக்கு பெரிய பிரச்சினையை கொடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்”. “குறிப்பாக கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான முக்கிய மூலப் பொருளான PET என்ற பொருளின் விலை உயர்வால், ஒரு சோயா சாஸ் பாட்டில் மற்றும் அதன் மூடியின் விலை கூட இப்போது அதிகமாகி இருக்கிறது” என்று அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமின்றி டீசல் விலை உயர்வால் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளும் எங்களுக்கு விண்ணை தொடும் அளவு வளர்ந்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Middle East energy crisis – Local food producers in Singapore express ongoing concerns.

“உலகமே முடக்கத்தில் ஆழ்ந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட, எங்களுக்கு இவ்வளவு செலவுகள் அதிகரிக்கவில்லை. ஊரடங்குகள் மூலம் எங்களுக்கு மக்களின் வரத்து குறைந்ததே அன்றி, இப்படி எரிபொருளோ அல்லது பிற பொருட்களில் தட்டுப்பாடோ ஏற்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் இந்த பிரச்சினையின் காரணமாக, பேக்கிங் செய்வதில் தொடங்கி உற்பத்தி, விநியோகம், அதை போக்குவரத்து செய்யும் செலவு, என்று கப்பல் காப்பீடு வரை அனைத்து செலவுகளும் அதிகரித்து இருக்கின்றன” என்று அவர் கூறினார். சிங்கப்பூரில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நேரடியாக வழங்கப்படும் டீசலின் விலையானது சென்ற பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஒரு லிட்டர் 1.2 வெள்ளியாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அது கிட்டத்தட்ட மூன்று வெள்ளி வரை உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ரேமண்ட் பேசுகையில்.. “எண்ணெய் விலை அதிர்ச்சி தரும் அளவிற்கு எல்லாவற்றையும் பாதிக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த நெருக்கடியின் முழுமையான உருவத்தை நாம் இன்னும் பார்க்கவில்லை என்பது தான். உற்பத்தியாளர்கள் தற்பொழுது வரை எந்த ஒரு விஷயத்திற்கும் விலையை அதிகரிக்கவில்லை, ஆனால் அவர்களிடம் இருக்கும் மூலப்பொருள்களின் அளவு குறைந்த பின்னோ, அல்லது அது முற்றிலுமாக தீர்ந்த பின்னோ, புதிய ஆர்டர்களை எடுக்கும் பொழுது தான் அவர்கள் இந்த உண்மையான விலையேற்றத்தை சந்திப்பார்கள். அப்போது நுகர்வோருக்கும் பெரிய அளவில் தாக்கம் கட்டாயம் ஏற்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து எரிபொருள் மட்டும் அல்லாமல் அங்கிருந்து வரும் உரம் விநியோகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய அளவில் யூரியா எனப்படும் உரத்தின் விலை கடந்த ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 35 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள சில முக்கிய நிறுவனங்கள் பாகிஸ்தான், தென்கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து உரங்களை வாங்க தற்பொழுது முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாற்று முயற்சியினால் உரத்தை வாங்குவதற்கான செலவும் அதிகரித்துள்ளதால் அரிசி மற்றும் கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதேநேரம் சிங்கப்பூரில் உள்ள காய்கறி, முட்டை மற்றும் மீன் பண்ணைகளுக்கு டீசல் மற்றும் தீவன விலை உயர்வு பெரிய இடியாக வந்திருக்கிறது.

அதனால் இன்னும் போரின் தாக்கத்தை நாம் முழுமையாக அனுபவிக்கவில்லை என்றே கூறலாம். தொடர்ச்சியாக வரவிருக்கும் விலைவாசி உயர்வையும் பிற சிறு சிறு இன்னல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.