ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஏற்கனவே அந்த போரினால் ஏற்பட்ட எரிபொருள் பிரச்சனை தற்பொழுது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. இதனால் ஆசிய பயணிகள் தங்களுடைய விமான கட்டணத்தில் திடீர் அதிகரிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஈரான் மற்றும் அமெரிக்க தரப்பினர் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போர் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தையும் கடந்து இந்த போர் நடந்த நிலையில், இரு தரப்பிலும் பல உயிர்கள் பறிபோனது. இது ஒருபுறம் இருக்க ஈரான் தன்னுடைய ஹர்மோஸ் கால்வாய் பகுதியை முடக்கியதன் மூலம் உலக அளவில் எரிபொருள் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இன்றளவும் பல நாடுகள் அந்த பிரச்சனையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போர் காரணமாக விமான எரிபொருள் விநியோகத்திலும் மிகப்பெரிய தட்டுப்பாடும் நெருக்கடியும் உண்டாகி இருக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் விமான போக்குவரத்து துறையை அது மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பயணிகள் தாங்கள் வழக்கமாக செலுத்தும் விமான கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் செலுத்த நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
Hormuz கால்வாய் மூடல்
உலக அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் கிட்டத்தட்ட 21 சதவீதத்திற்கும் அதிகமான எரிபொருள் இந்த கால்வாயின் வழியாகத்தான் கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் இந்த வழி முடங்கினால் உலக அளவில் எரிபொருள் விநியோகம் என்பது மிகப்பெரிய அளவில் பிரச்சினையை சந்திக்கும். நமது சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கு அல்ல, இருப்பினும் நம்முடைய உறுதியான கொள்கைகள் மூலம் நமது நாணய ஆணையம் நம்முடைய சிங்கப்பூர் டாலரின் மதிப்பை உயர்த்தி அந்த பிரச்சனையை தற்பொழுது சமாளித்து வருகின்றது. இருப்பினும் எரிபொருள் பிரச்சனை என்பது விமான நிறுவனங்களையும் பெரிய அளவில் பாதித்திருக்கின்றது.
ஏற்கனவே இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏர் நியூசிலாந்து, ஏர் ஏசியா எக்ஸ், பட்டிக் ஏர் ஏசியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவையை வழக்கத்தை விட பெரிய அளவில் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல எரிபொருள் விலை உயர்வால் சில நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் சுமையை சமாளிக்க, பணிகளின் விமான டிக்கெட் விலையை உயர்த்தவும் முடிவு செய்து வருகின்றன. அதே நேரம் சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் தங்களின் சொந்த தேவைக்காக எரிபொருளை சேமித்து வைத்துக்கொண்டு அதனுடைய ஏற்றுமதியை இப்பொழுது பெரிய அளவில் குறைத்து இருக்கிறது. அதன் தாக்கமும் மியான்மர், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற இறக்குமதியை மட்டுமே சார்ந்திருக்கும் நாடுகளில் கடும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக சமீபத்தில் வியட்நாமில் 70% வரை விமான கட்டணம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் போக்குவரத்து நிபுணர்களின் தற்பொழுது ஈரான் மற்றும் அமெரிக்க இடையே நிலவும் இந்த போர் சூழல் எவ்வளவு காலம் நீடிக்கும் அதனால் விநியோக சங்கிலி எந்த அளவுக்கு பாதிக்கப்படும், மேலும் அது சீரடிய எத்தனை நாள் எடுத்துக்கொள்ளும் என்பது போன்ற பல தரநிலைகளின் அடிப்படையில் தான் இனி விமான கட்டணங்கள் இருக்கும் என்று கூறியுள்ளனர்.