நேற்று மே 26 ஆம் தேதி சிங்கப்பூரில் சுவா சூ காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் ஒரு ஆடவர் பலத்த காயம் அடைந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மே 26 ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 248-வது பிளாக் அவன்யூ இரண்டில் பன்னிரண்டாவது மாடியில் உள்ள லிப்ட் அருகே அந்த பெண் கொடூரமாக குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து இருக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு அந்த நபர் இப்பொழுது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கொல்லப்பட்ட அந்த பெண்ணும் பனிரெண்டாவது மாடியில் இருந்து குதித்த அந்த ஆணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து ஊடகங்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தங்களுக்கு அன்று இரவு சுமார் 9 மணியளவில் உதவி கூறி அந்த பிளாகில் இருந்து அழைப்பு வந்ததாகவும். சம்பவ இடத்திற்கு எங்கள் மருத்துவ குழுவுடன் நாங்கள் விரைந்து பொழுது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் உள்ள லிப்ட் அருகே ஏற்கனவே ஒரு பெண் இறந்து கிடந்ததாகவும், மற்றொரு நபர் சுயநினைவின்றி கீழ் தளத்தில் கிடந்ததாகவும். அவரை உடனடியாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் எஸ்டிஎஃப் படையினர் கூறினர்.
அந்தப் பெண் கொல்லப்பட்ட அதே பன்னிரெண்டாவது மாடியில் வசிக்கும் ஒரு 13 வயது பள்ளி மாணவி போலீசாரிடம் பேசுகையில்.. “இரவு தான் வீட்டில் இருந்த பொழுது சரியாக 9 மணி அளவில் ஒரு பலத்த சத்தம் கேட்டதாகவும். அது ஏதோ கட்டுமான பணி நடக்கும் சத்தம் போல இருந்தது என்றும் அவர் விவரித்தார். பின் அந்த சிறுமியின் தாயார் அன்று இரவு 9:30 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொழுது ஏற்கனவே அந்த தளம் போலீசார் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடியில் வசிக்கும் திருமதி தேவி தனது வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த பொழுது திடீரென கீழ்தளத்தில் ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்தது போல பலத்த சத்தம் கேட்டதாகவும் அவர் பயந்து வெளியே வந்து பார்த்த பொழுது ஒரு நபர் தரையில் குப்பைத் தொட்டியின் அடியில் கிடப்பதை கண்டதாகவும். அந்த குப்பைத் தொட்டி அவரை மூடி இருந்தது என்றும், ஆனால் அவரது தலையும், கைகளும் வெளியே தெரிந்தன என்றும் ரத்த வெள்ளத்தில் அவர் கடந்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் அந்த நபர் 12வது மாடியில் வசிப்பவர் என்றும் அந்த பெண் போலீசாரிடம் கூறியிருக்கிறார். இறந்த அந்தப் பெண்ணும் மாடியில் இருந்து குதித்த அந்த ஆடவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதால் இது தனிப்பட்ட விரோதத்தில் நடந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று தற்பொழுது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
