உலக அளவில் உயர்ந்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் வெளியேற்றத்திற்கு மத்தியில் சிங்கை கிராப் நிறுவனம் ஒரு புதிய சலுகையை சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையில் தற்பொழுது அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன்படி கிராப் செயலி மூலம் எல்லை தாண்டிய பயணங்களை இனி பயணிகள் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கு முன்னதாக சிங்கை – மலேசியா இடையிலான எல்லை தாண்டிய பயணத்திற்கு கிராப் செயலி மூலம் தங்களுடைய பயண நேரத்திற்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த மே மாதம் நான்காம் தேதி முதல் கிராப் இந்த எல்லை தாண்டிய பயண சேவைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து, குறுகிய காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மே 29ஆம் தேதி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆகவே இந்த முன்பதிவுக்கான பயண நேரம் தற்பொழுது 6 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கடைசி நிமிட திட்டமிடல் அல்லது அவசர தேவைகளுக்காக எல்லை கடந்து பயணிக்க விரும்புவோருக்கு இந்த புதிய சேவை பெரிய அளவில் கை கொடுக்கும் என்று கிராப் நிறுவனம் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். எல்லை தாண்டிய பயணம் பயணியால் உறுதி செய்யப்பட்ட உடனேயே அவர் தன்னுடைய நாடு திரும்பும் (Return Journey) பயணத்தையும் முன்பதிவு செய்ய நினைவூட்டும் வகையில் “புஷ் நோட்டிபிகேஷன்” அனுப்பும் புதிய சேவையும் தற்பொழுது கிராப் செயலில் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த புதிய மாற்றங்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெரும் என்றும் மேலும் நேற்று மே 29 முதல் வருகின்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் அனைத்து எல்லை தாண்டிய பயணங்களுக்கும் கிட்டத்தட்ட 30% வரை கிராப் நிறுவனம் தள்ளுபடியை வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக இதே காலகட்டத்தில் 20% தள்ளுபடியை கிராப் நிறுவனம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாற்றங்கள் குறித்து பேசிய கிராப் சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் செயல்பாடுகளின் மூத்த இயக்குனர் திரு. அஸ்வின் அவர்கள் “நாளை மறுநாள் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரவிருக்கிறது. ஜூன் மாதம் என்பது பெரிய அளவிலான விடுமுறைகளை கொண்ட மாதம் என்பதால் குழந்தைகளோடு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையான பயணங்கள் அதிகரிக்கும். இது எல்லா வருடமும் எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயம் தான் என்பதனால் தற்பொழுது இந்த ஆறு மணி நேர சேவையையும் 30 சதவீத தள்ளுபடி சேவையையும் அறிமுகம் செய்துள்ளதாக கூறியிருக்கிறார்.
கடந்த மே மாதம் நான்காம் தேதி நடைமுறைக்கு வந்த மேம்படுத்தப்பட்ட எங்களுடைய எல்லை தாண்டிய டாக்ஸி திட்டத்தின் படி ஜோகூர் செல்லும் பயணிகள் ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்திரி, forest City, kulai மற்றும் செனாய் ஆகிய இடங்களில் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இரு நாடுகளிலும் இருந்து புறப்படும் பயணிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இறங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே நில போக்குவரத்து ஆணையங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்பொழுது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
