திரும்பும் பக்கமெல்லாம் இப்பொழுது போர்ப்பதட்டத்தை தாண்டி El Nino குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. குறிப்பாக சிங்கப்பூரில் இந்த 2026 ஆம் ஆண்டில் இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் El Nino என்ற அந்த வானிலை மாற்றம் உண்டாவதற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
El Nino என்றால் என்ன?
தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவலாக மிக கடுமையான வெப்பமும் அதனால் வரட்சியும் ஏற்படும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. பசிபிக் பெருங்கடலின் வெப்ப நிலையில் ஏற்படும் ஒரு மிகச்சிறிய மாற்றம் தான் இந்த இயற்கையான மாற்றத்திற்கு (El Nino) காரணம் என்கின்றார்கள் அறிஞர்கள். கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை El Nino பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிகழ்வு தற்பொழுது நடக்க உள்ளது. இது இயற்கையான ஒரு நிகழ்வு தான் என்றாலும் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்பொழுது உருவாக இருக்கும் El Nino சற்று வீரியத்துடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக El Nino காலங்களில் சிங்கப்பூரில் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு இடையிலே நமக்கு பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழை என்பது பெரிய அளவில் குறையும். கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த El Nino காரணமாக நமக்கான தென்மேற்கு பருவ மழை என்பது கிட்டத்தட்ட 35 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது. அதேநேரம் அந்த El Nino வலுவிழந்தால் இயல்பை விட சற்று கூடுதலான மழை பொழிவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிற ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது இந்த 2026 ஆம் ஆண்டு வரக்கூடிய El Nino சற்று வீரியம் மிக்கதாக பார்க்கப்பட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்திய பெருங்கடலில் இருமுனை எனப்படும் IOD மற்றொரு வாழ்நிலை நிகழ்வாகவும், El Nino மற்றும் இந்த IOD ஆகிய இரண்டும் ஒன்றாக இணையும் பொழுதுதான் வெப்பம் அதிகரித்து வறட்சி இன்னும் தீவிரமடையும் என்றும், இது இந்த 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் வரை நீடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலில், இந்த கடுமையான வாழ்நிலை மாற்றத்தை எதிர்கொள்ள சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் முகமை தலைமையினான 28 அரசு அமைப்புகள் அடங்கிய பணி குழு ஒன்று தற்பொழுது முழு தயார் நிலையில் இருக்கின்றது. காற்றின் தரம் கொஞ்சம் மாறினாலும் அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் தொடர்ந்து காற்றின் தர குறியீடு கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் வெப்ப காலங்களில் இருந்து மக்களை காப்பாற்றவும் தொடர்ச்சியாக முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
