சிங்கப்பூரின் ஒரே குப்பை கொட்டும் கிடங்காக அமைந்திருக்கிறது Pulau Semakau தீவில் உள்ள அந்த இடம். ஆனால் இப்போது அது வேகமாக நிரம்பி வருவதால் வருகின்ற 2035 ஆம் ஆண்டுக்குள் அது தன்னுடைய முழு கொள்ளளவை எட்டும் என்றும், அதன் பிறகு வரக்கூடிய குப்பைகளை கையாள்வது சிங்கப்பூருக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்றும் பலர் கருதிய நிலையில் இன்னும் 9 ஆண்டுகள் கழித்து வரப்போகும் அந்த பிரச்சினையை இப்போதே சரி செய்ய தொடங்கி இருக்கிறது சிங்கப்பூர்.
அதன்படி Pulau Semakau தீவில் உள்ள அந்த இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை, “பொக்கிஷங்களாக” மாற்ற சிங்கப்பூர் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக TREASURES (புதையல்) (Towards Resource Efficiency and Sustainability for URban Environments) என்ற மையம் மூலம் முக்கிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுக்க உள்ளது. அதன்படி இந்த குப்பை கிடங்கிற்கு வரும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நச்சு கழிவுகளில் இருந்து நமது சிங்கப்பூரின் கட்டுமானத்துறைக்கும், இதர தொழில்களுக்கும் தேவைப்படும் மதிப்பு மிக்க பொருட்களை இந்த TREASURES பிரித்தெடுக்கும்.
அப்படி செய்வதன் மூலம் நமக்கு கட்டுமானத் துறைக்கான செலவு குறையும் அதே நேரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த குப்பை கிடங்கு நிரம்பாமல் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் முகமையான NEA மற்றும் நமது நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் NTU இணைந்து இந்தப் பணியில் ஈடுபட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் ஜூன் 17ஆம் தேதி நமது சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் துறைக்கான மூத்த மாநில அமைச்சர் ஜானில் புதுச்சேரி வெளியிட்டார்.
நேற்று முன்தினம் ஜூன் 17ஆம் தேதி சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் சேவைகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் மற்றும் உலக அளவிலான கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய போது இந்த திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் இதுவரை நமக்கு கையாள கடினமாக இருந்த கழிவு பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பு தான் இந்த TREASURES திட்டம். அதே நேரம் நாம் நினைப்பது போல இந்த கழிவுகள் அனைத்தையும் ஒரே நொடியில் மறுசுழற்சி செய்ய முடியாது.
இருப்பினும் அதிலிருந்து நமக்கு தேவையான பொருட்களை பிரித்து அதை ஒழுங்கான முறையில் நிர்வகித்து நமது தொழில் துறைக்கு பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும் என்பதாலேயே இதற்கு மிக மிக பொருத்தமான பெயராக TREASURES (புதையல்) என்று பெயரிட்டோம் என்றார் அவர். நமது அறிவியலாளர்களின் கணிப்பின்படி கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த குப்பை கிடங்கு வருகின்ற 2035 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிரம்பி விடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் நம்மளுடைய பூஜ்ஜிய கழிவு மாஸ்டர் பிளானின் மறு ஆய்வு பகுதியாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனுடைய சாராம்சமே குப்பைகளை குறைக்கும் அதே நேரம் அதிலிருந்து நமக்கு தேவையான பொருட்களை மீட்டெடுப்பதே. இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 35 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படுகிறது என்றும் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் 2030 மார்ச் 31ஆம் தேதி வரை NTU பல்கலைக்கழகம் இதனை வழிநடத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
