சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழந்து மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். தற்பொழுது மனிதவள அமைச்சகம் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கையில் செயல்பட்டு வரும் ஏர் கண்டிஷனர் பழுது பார்க்கும் இரண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், திடீரென வேலை இழந்திருக்கின்றனர்.
ஏற்கனவே அவர்களுக்கு இரண்டு முதல் நான்கு மாத சம்பள பாக்கியம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு கடந்த ஜூன் 22 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சேவை மையத்தை அணுகி தங்களுடைய நிலையை விவரித்தனர். அவர்கள் அடுத்த வேலை உணவுக்கு கூட எங்களிடம் பணம் இல்லை, கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு மாத காலங்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகிறோம்.
தங்குமிடங்களிலும் எங்களுக்கு அனுமதி இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த சூழ்நிலையில் உடனடியாக செயல்பட்ட மனிதவள அமைச்சகம் அவர்கள் அனைவருக்கும் தலா 100 வெள்ளி ரொக்கமும், அதேபோல 100 வெள்ளி மதிப்புள்ளான வவுச்சர்களும் தற்பொழுது தற்காலிகமாக வழங்கி அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வருகிறது. இந்த சூழலில் இன்று மனிதவள அமைச்சக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமார் 40 நிறுவனங்களில் ஏற்கனவே வேலை இழந்து தவிக்கும் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச்செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பேசிய அவர் இதுவரை இந்த இரு நிறுவனங்களால் கிட்டத்தட்ட 400 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே அவர்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர் மையம் உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள Tuas View விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க கட்டாயம் சிங்கப்பூர் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.
குறிப்பாக 40 நிறுவனங்கள் அவர்களுக்கு வேலை அளிக்க முன் வந்திருப்பதாகவும் ஏற்கனவே 150 பேரினுடைய வேலை கிட்டத்தட்ட ஊர்ஜிதம் ஆகிவிட்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர் தொழிலாளர்களை இப்படி எந்த விதமான பராமரிப்பும் இன்றி நடுத்தெருவில் கைவிடுவதும், அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றுவதும் ஏற்புடையது அல்ல. இதை ஒருபோதும் NTUC வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. முதலாளிகள் தங்களை நம்பி வரும் தொழிலாளர்களை பொறுப்புடன் நடத்த வேண்டும் குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள் முழுமையாக ஒரு நிறுவனத்தை மட்டுமே நம்பி வேலைக்கு வருவதாகவும் அவர் சற்று கட்டமாகவே பேசினார். அதே நேரம் கிட்டத்தட்ட 40 நிறுவனங்கள் அவர்களை தங்களுடைய நிறுவனத்தில் பணிகளுக்கு எடுத்துக் கொள்ள முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
