சிங்கப்பூரில் ஏர்-கண்டிஷனர் ரிப்பேர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த முன்னணி நிறுவனமான KPA Engineering என்ற நிறுவனம், தன்னிடம் பணியாற்றிய இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய விவகாரத்தில் இப்போது ஒரு அதிரடி உண்மை வெளிவந்துள்ளது. என்னவென்றால் இந்த நிறுவனம் நேற்று இன்று அல்ல, கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்தே கடுமையான பணநெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே KPA இன்ஜினியரிங் மற்றும் எஸ்.கே இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களால் வேலை இழந்து சம்பளம் இல்லாமல் பல வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், VVR பிளான்ட் இன்ஜினியரிங் என்ற மூன்றாவது நிறுவனமும் சில தினங்களுக்கு முன்பு தன்னிடம் பணியாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பொதுவான இயக்குனராக சிங்கை நிரந்தர குடியுரிமை வைத்திருக்கும் இந்தியாவை சேர்ந்த பழனி என்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பிடம் மற்றும் உணவுக்கு வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த மூன்று நிறுவனங்களுக்கும் இயக்குனராக செயல்பட்டு வந்த ராமு பழனிவேலு என்கின்ற சிங்கப்பூரின் நிரந்தர குடி உரிமை கொண்ட இந்திய வம்சாவளி நபர், தற்பொழுது சிங்கப்பூரை விட்டு வெளியேறி இருப்பதாக நம்பப்படுகிறது.

அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வரும் அதே நேரம் மனிதவள அமைச்சகமும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறது. இந்த நபரின் இயக்கத்திற்கு கீழ் ஏர்கண்டிஷனர் பழுதுபார்த்தல் பிளம்பிங் மற்றும் கட்டுமான துறை என்று மொத்தம் நான்கு விதமான நிறுவனங்கள் இயங்கி வந்திருக்கிறது.
மேலும் இந்த நபர் குறித்த ACRA ஆய்வுகள் செய்த பொழுது கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இவர் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் HSBC வங்கிக்கு கடன் நிலுவைத் தொகை வைத்திருப்பதும் அது சம்பந்தமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் HSBC வங்கியை பொறுத்தவரை அதற்கான நிலுவைத் தொகையை கட்டப்பட்டு அவர் மேலிருந்த வழக்கு நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிபிஎஸ் வங்கியிடம் இவர் பெற்ற கடன் தொகைக்கு அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை தற்போது வரை நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த பதிவுகள் கூட இன்றும் அரசு ஆவணங்களில் அப்படியே இருக்கின்றன. அதாவது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரபல டிபி எஸ் வங்கிக்கு தரவேண்டும் பெரும் கடன்தொகையை இன்னும் செலுத்தாமல் அந்த நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில் “ஒரு வங்கியிடம் நிறுவனங்கள் கடன் பெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அப்படி கடன் தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் நாங்கள் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம். அந்த முறையிலும் பணம் வராவிட்டால் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். மேலும் அப்படி நிறுவனம் முடக்கப்படும் பொழுது அதனுடைய சொத்துக்கள் விற்கப்பட்டு முதலில் வங்கிக்கான தொகையை எடுத்துக்கொண்டு பின்னர்தான் ஊழியர்களுக்கு பணம் பிரித்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

அதனால் இந்த விஷயத்தில் இந்த நிறுவனம் ஜப்தி செய்யப்பட்டு அதன் சொத்துக்கள் விற்கப்பட்டு வங்கிக்கு வழங்கப்பட்ட பின்பு பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதில் பங்கு வழங்கப்படுமா என்பது குறித்த இன்னும் தெளிவாக தெரியவில்லை. தற்போதைக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் அந்த 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு தலா 200 ரூபாய் ரொக்கமும் 100 ரூபாய் FairPrice வவுச்சரும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.