கடந்த ஆண்டு சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஒரு மிக முக்கிய தகவலை வெளியிட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 2026 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய டிக்கெட் விலையில் 1 முதல் 42 டாலர் வரை கூடுதல் வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று அறிவித்திருந்தது. வரும் காலங்களில் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான “பசுமை எரிபொருள்” வாங்க ஏற்படும் அந்த செலவுகளை ஈடு கட்டும் விதத்தில் விமான பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்பொழுது மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக தற்காலிகமாக அந்த கட்டண உயர்வை ரத்து செய்வதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்திருக்கிறது.

Middle East war impact – Singapore CAAS takes a positive decision, bringing relief to international travellers.

Green Jet Fuel Levy

முழுக்க முழுக்க பசுமையான ஆற்றலுக்கு மாற வேண்டும் என்பதுதான் சிங்கப்பூரின் குறிக்கோள். இது அடுத்த ஆண்டே நடந்துவிடப் போவது இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒன்றே சிறந்த வழி என்று பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே சிங்கை முழுவதும் தானியங்கி பேட்டரி வாகனங்கள், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை இயக்க நமது அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்த சூழலில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விமானங்களை பயன்படுத்தவும், ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்தது. அதுதான் Green Jet Fuel Levy. இதன்படி சிங்கப்பூரிலிருந்து புறப்படும் ஒவ்வொரு விமானமும் பசுமை எரிபொருளை பயன்படுத்த வேண்டும். அதற்கு ஆகும் செலவை கணிசமான அளவில் வரி என்கின்ற பெயரில் விமான பயணிகளிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. காரணம் இந்த பசுமை எரிபொருளை உருவாக்குவது என்பது வழக்கமான எரிபொருளை உருவாக்குவதை விட அதிக செலவு பிடிக்கும் என்பதால் தான்.

ஆகவே அதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை குறைக்க அதில் ஒரு பங்கை விமான பயணிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அதன்படி சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளின் பயண தூரத்தை பொறுத்து அவர்களிடம் ஒன்று முதல் 42 டாலர் வரை ஒரு பயணத்திற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். மேலும் அந்த கட்டணமானது அவர்களுடைய டிக்கெட்டில் வரி என்கின்ற பெயரில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் CAAS அறிவித்திருந்தது. இந்த வரியானது ஏப்ரல் 1 முதல் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும், வரும் அக்டோபர் மாதம் 2026 முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவித்திருந்தது.

இந்த சூழலில் தான் கடந்த மார்ச் 25ஆம் தேதி நமது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஒரு முக்கிய அறிக்கையில் தற்பொழுது மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே விமான சேவை நிறுவனங்களும் மக்களும் பெரிய பொருட் செலவில் மூழ்கி இருப்பதால், இதனால் மக்கள் கூடுதலான பிரச்சனைகளை சந்திக்க வேண்டாம் என்று கூறி தற்போதைக்கு இந்த வரியை ஒத்தி வைப்பதாகவும், அதன்படி வருகின்ற அக்டோபர் 1, 2026 முதல் விற்கப்படும் டிக்கெட்களுக்கு இந்த வரி அமல்படுத்தப்படும் என்றும், ஜனவரி 1 2027 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் அனைவருக்கும் இந்த வரி பொருந்தும் என்றும் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்த கட்டணம் உயர்வு எப்படி அமல்படுத்தப்படும்?

உதாரணமாக மூன்று பயணிகள் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாங்காக், லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு செல்ல உள்ளனர் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்கள் எக்கனாமி அல்லது பிரீமியம் எக்கானமி வகுப்பில் பயணிக்கும் பொழுது பாங்காக் செல்பவருக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 1 டாலர் கூடுதலாகவும், லண்டன் செல்ல நினைப்பவருக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 6.4 டாலரும், நியூயார்க் செல்ல நினைப்பவருக்கு 10.40 டாலரும் கட்டண உயர்வு ஏற்படும். இதுவே அதே விமானங்களில் பிசினஸ் அல்லது முதல் வகுப்பில் பயணிப்பவர்களுக்கு பாங்காக் செல்ல 4 வெள்ளியும், லண்டன் செல்ல 25.6 வெள்ளியும், நியூயார்க் செல்ல 41.60 வெள்ளியும் கூடுதலாக டிக்கெட் கட்டணத்தில் வசூல் செய்யப்படும்.