சிங்கப்பூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதியாண்டில் பணவீக்கம் குறைந்த அதே நேரம், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற தொழிலாளர்களின் (Spending Power) ஊதியமும் கிட்டத்தட்ட நான்கு சதவீதத்திற்கும் மேல் மேம்பட்டு உள்ளதாக மனிதவள அமைச்சகம் நேற்று மே 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி சிபிஎப் பங்களிப்புகளை உள்ளடக்கிய முழு நேர வேலை பார்க்கும் சிங்கப்பூர் வாசிகளின் மாத சம்பளம் 2025 இல் 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 2024 பதிவான 5.6 என்கின்ற வளர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும் அதற்கு முந்தைய ஆண்டு பதிவான (2023ல்) 3.2 என்ற அளவை விட இது மிகவும் அதிகம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

சரிந்த பணவீக்கம்

தொழிலாளர்களின் ஊதியம் என்பது அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சிங்கையில் குறைந்த பணவீக்க விகிதம் தான். நேற்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட சில அதிகாரப்பூர்வ தரவுகளின் படி 2024 பணம் வீக்கம் சராசரியாக 2.4 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு அதே பணவீக்கத்தினுடைய சராசரி 0.9 சதவீதமாக பெரிய அளவில் குறைந்து இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனால் 2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து தங்களுடைய ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை உயர்த்திய போதிலும் பணவீக்கம் என்பது பெரிய அளவில் உயரவில்லை.

மேலும் கடந்த 2025-ல் 72.4 சதவீத சிங்கை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இன்கிரிமெண்ட் எனப்படும் ஊதிய உயர்வையும் அறிவித்திருக்கின்றன. இதை தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள அந்த நிறுவனங்கள் கையாண்ட ஒரு யுக்தி என்றும் மனித வள அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. அதே நேரம் சிங்கப்பூரில் உள்ள 18.5 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் 2025 ஆம் ஆண்டில் அடிப்படை ஊழியர்களின் ஊதியம் சுமார் 4.8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் இளநிலை மேலாண்மை எனப்படும் நடுத்தர பணிகளில் இருக்கும் மற்றும் முதுநிலை மேலாண்மை எனப்படும் மூத்த பணியாளர்களின் ஊதியம் முறையே 5.1 மற்றும் 4.9 என்கின்ற சதவிகிதத்தில் வளர்ச்சியை கண்டிருப்பதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இது கடந்த 2024 ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது குறைவான அளவு தான் என்றாலும் கூட பணவீக்கத்தால் சிங்கப்பூரில் வசிக்கும் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பெரிய அளவில் குறைந்திருக்கிறது என்பதுதான் மனிதவள அமைச்சகத்தின் கூற்று. அதேபோல 2025 ஆம் ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஊதிய வளர்ச்சி நல்ல முறையில் இருந்தது என்றும் இருப்பினும் எச்சரிக்கையான ஒரு வணிக சூழலுக்கு மத்தியிலும் இது நடந்திருப்பது தான் பாராட்டுதலுக்கு உரியது என்றும் மனிதவள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.