உலக அளவில் நிலவிவரும் ஒரு பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் சிங்கப்பூர் தனது பொது மக்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. இதன் மூலம் சிங்கைக்குள் பெரிய தீ விபத்துகள், ரசாயன கசிவுகள் அல்லது ஏதோ ஒரு வகையில் நமக்கு கொடுக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற தீவிரமான சம்பவங்களின் போது இங்குள்ள பொதுமக்களை உடனடியாக எச்சரிக்க ஒரு “வெகுஜன அவசர எச்சரிக்கை அமைப்பை” (Mass Emergency Alert System) வருகின்ற மே மாதம் முதல் சிங்கப்பூர் அரசு அமல்படுத்த உள்ளது இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

அறிமுகமாகும் SG அலர்ட்..!

SG Alert என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அவசரகால ஒளிபரப்பு திட்டத்தின் மூலம் மக்களுக்கு பேரிடர் காலங்களில் எளிமையாக, துரிதமாக அலர்ட் செய்திகளை வழங்க முடியும். வருகின்ற மே 10ம் தேதிக்கு பிறகு படிப்படியாக இந்த திட்டம் சிங்கை முழுவதும் அமல்படுத்தபட உள்ளது. இந்நிலையில் இதனுடைய ஆரம்ப கட்டமாக சிங்கப்பூரில் சிங்டெல் சிம் கார்டு பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கப்பெறும். 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் StarHub பயனாளர்களுக்கும், 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் எம்1 மற்றும் சிம்பா பயனாளர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை நேற்று ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இப்போது இந்த புதிய எஸ் ஜி அலர்ட் குறித்து கூடுதலாக சில விஷயங்களை காணலாம்.

இந்த எஸ்ஜி அலட் என்பது நமது நாட்டுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும்பொழுது அதிலிருந்து மக்களை துரிதமாக மீட்க அனைவருக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை செய்தியை கொடுக்க உருவாக்கப்பட்டது தான். இது உங்களுடைய போன் Silent Mode அல்லது DND எனப்படும் “டூ நாட் டிஸ்டர்ப்” மோடில் இருந்தாலும் கூட இந்த எச்சரிக்கை சத்தமானது உங்களுக்கு கேட்கும். அதேபோல இந்த எச்சரிக்கையானது சுமார் 10 வினாடிகளுக்கு நீடிக்கும் ஒரு பிரத்தியேக ஒளியையும், அதிர்வையும் கொண்டிருப்பதால் நீங்கள் இயல்பாக வைத்திருக்கும் காலர் டியூனில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டவாறு உங்களுக்கு தெரியும். அதே நேரம் இதற்கு முன்னதாகவே சிங்கப்பூரில் அமலில் இருந்த “எஸ் ஜி செக்யூர்” செயலியை போல இல்லாமல் இந்த சேவையை பெறுவதற்கு உங்களுடைய அலைபேசியில் எந்த விதமான ஆப்பையும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

அதேபோல பல மக்கள் ஒரே இடத்தில் செல்போனை பயன்படுத்தும் போது ஏற்படும் நெட்வொர்க் பிரச்சனை போன்ற இணைய செயல்பாடுகளில் பிரச்சனை இருந்தாலும் எந்த விதமான இடர்பாடும் இன்றி இந்த அலர்ட் மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.